Saturday, October 20, 2018

துரோகம்....

      எதிரியாக இருந்தாலும் துரோகியாக மாறாத நிலை பெறுவோம்!!!!
எதிர்ப்பு கோபத்தை வெளிப்படுத்தும்... அதன் தாக்கம் விரைவில் குறையும்... அதனால் ஏற்படும் விழைவு மாறவும் வாய்ப்புண்டு... உறவுக்குள்ளோ, நட்புக்குள்ளோ ஏற்படும் மனகசப்பு எதிர்ப்பாக இருக்கும் போது அதன் வீரியம் குறைந்தவுடன் நதிகள் இணைவது போது சுவடு தெரியாமல் இணைந்துக் கொள்ளும்.... ஆனால் துரோகம் இணையாமல் பழிக்கு வழித் தேடும்... அது உதட்டில் தேனும் உள்ளத்தில் விஷமும் கொண்டு மெதுவாக கொல்லும்...
நன்முறையில் பயணித்துக் கொண்டே எதிர்பாராமல் படுகுழியில் தள்ளும்.. இது தவிர்க்கப்பட வேண்டியது.... நம்பிக்கை என்பது அனைவரிடத்தும் எளிதில் வந்துவிடுவதில்லை.... அதற்குரியவர்களாக ஒரு சிலரே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.... ஆழ்மனதின் எண்ணங்கள், ஏக்கங்கள், நன்மை தீமை தனிப்பட்ட கருத்துக்கள் யாவும் கள்ளமின்றி பகிரப்படும்... அந்த நம்பிக்கைக்கு துரோகம் இழைப்பதை விட கொடுமையான செயல் இல்லை எனலாம்....
ஒரு நண்பன் எதிரியாகலாம்' எதிரி நண்பனாகலாம்... ஆனால் ஒரு துரோகி நண்பனாக முடியாது... எதிர்ப்பின் வலியை மனது எளிதில் தாங்கிக் கொள்ளும்... துரோகத்தின் பழியை தாங்க முடியாது.... அது உடைந்த கண்ணாடிபோல மீண்டும் பழைய நிலை திரும்பாது....
பல சரித்திர வரலாற்றில் கூட எதிரிகள் இன்றும் வீரத்துடன் போற்றப்படுகின்றனர்... ஆனால் துரோகிகள் எத்தனை யுகங்கள் கடந்தாலும் தூற்றப்படுவர்... அவர்களின் துரோக வடு வரலாற்று பக்கங்களையும் அழுக்காக்கிவிடும்.... அவ்வளவு எளிதாக மறைவதில்லை....
யாரேனும் உங்களுக்கு பகையாக மாறினால் எதிர்த்து நின்று போராடுங்கள்... இல்லையேல் அதனினும் சிறப்பாக மெளனமாக விலகி செல்லுங்கள்... துரோகத்தின் வழி பதில் அளிக்காதீர்.... எட்டி நின்று வாள் வீசினாலும் பரவாயில்லை கட்டியணைத்து முதுகில் குத்தாதீர்....

 அதனால் வலியோடு .பழியும் வந்து சேரும்.....
 படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

தவிப்பு......

அடிக்கடி தவிக்க விட்டு செல்வது சுயநலமா? சூழ்நிலையா!!!!
தவிக்க விட்டு செல்பவர்களையே இடைவிடாது எண்ணுவது முடிவிலா அன்பா?
முட்டாள் தனமா!!!!
அவன் தன் பணியைத் தொடர!!
அவள் மனம் அவனைத் தொடர!!
சிரித்து பேசியகாலத்தை மறந்து
அவன் மறைய!!
அழகிய அந்த நாட்களை எண்ணி
அவள் உறைய!!!
தேவையில்லையென இடையில் விட்டு
செல்லும் மனமே!!!
தெளிவிலா பயணத்தை தொடராமல்

 இருந்திருந்தால் நலமே!!!
 படம் இதைக் கொண்டிருக்கலாம்: பறவை மற்றும் வெளிப்புறம்

Wednesday, October 17, 2018

நினைவுகள்...

கடல் அலைகள் கரைத் தொடுவதை போல ... மனதில் எழும் நினைவலைகள் வாழும் காலம் வரை தொடர்ந்து கடந்த கால நிகழ்வை தொட்டு விட்டு தான் திரும்புகிறது ... அவற்றுள் சில சுகமான நினைவுகள்... சில சுமையான நினைவுகள்...
நினைவு சில சமயம் மனதின் வடுபட்ட காயத்தை கிளறி விடும் கத்தியாகவும் ... சில சமயம் காயத்தை ஆற்றும் சக்தியாகவும் மாறிவிடும்... நினைவுகள் கடந்த கால நிகழ்வுகளை ஒரு கோர்வையாக கண் முன் காட்டும்... அதில் சிறு வயதிலிருந்து வாழ்ந்து பயணித்த பாதைகள் புலப்படும்....
சிலர் மலர் நிறைந்த சோலையில் தென்றலுடன் பயணித்திருப்பர்... சிலர் மணல் நிறைந்த பாலையில் வாடைகாற்றுடன் வாழ்ந்திருப்பர்.... கடந்து வந்த பாதை அதற்காக வழிகாட்டிய உள்ளங்கள் ... தடை செய்த பள்ளங்கள் அனைத்துமே நினைவுக்கு வரும்... சில மகிழ்ச்சியான நினைவுகள் தற்போதைய நிலையில் நினைக்க விரும்பாத வகையிலும் .. சில சோகமான நினைவுகள் தற்போது நினைத்து பார்த்தால் சுகமானதாகவும் தோன்றும்....
சில நினைவுகள் கண்களை குளமாக்கும்.. மனதை ரணமாக்கும்... சில வண்ணத்து பூச்சியாய் மனதை பறக்க விடும்.. மனதை தேனில் மிதக்கவிடும்...
இத்தகைய நினைவுகள் நாம் செய்த தவறுகளை மீளாய்வு செய்து நம்மை பக்குவப்படுத்தும்.... வருங்கால வாழ்வுக்கான வழிகாட்டியாக மாறும்.... கடந்து வந்த வாழ்வு முறை, சூழ்நிலை, நட்பு, உறவு, காதல், கடமை, அனைத்தையும் இறுதி வரை மனதில் மறையாமல் யாருக்கும் தெரியாமல் புதுபித்துக் கொண்டே இருக்கும்... நம் விபரம் அறிந்த நாளில் இருந்து நம் நினைவலைகளை மீட்டினால் அது ஒரு காட்சி படமாய் கண் முன் வந்து நவசர உணர்வை நமக்கு விருந்தாக அளித்து விட்டு செல்வதை காணலாம்... இவற்றையும் அவ்வப்போது மூடியுள்ள மன திரையை விலக்கி உணர்ந்து தான் பார்ப்போமே...

அமைதி!! அமைதி!! அமைதி!!

அமைதி!! அமைதி!! அமைதி!!
அமைதி பல்வேறு சூழலில் பல்வேறு பொருள்படுகிறது... அமைதியான சூழல் கவிதைக்கும் , கற்பனைக்கும் வழிவகுக்கிறது... யாருமில்லா தனி வெளியில் இயற்கையின் அழகில் அமைதியான தெளிந்த நீரோடை போன்ற மனதுடன், இரைச்சலற்ற நிலையில் பல இனிய கற்பனைகள் வந்து சேரும்....
அமைதியை மெளனத்துடன் ஒப்பிட முடியாது... அது மெளனம் தாண்டிய நிலை... அமைதிக்கு பல முகங்கள் உண்டு ..அது பல நிலைகளில் பல அர்த்தம் காட்டும்.... தாயின் கருவறையில் நிலவும் கள்ள மற்ற அமைதி ...இந்த அமைதி மீண்டும் கிடைக்காத பொக்கிஷம்.... ஆழ்ந்த உறக்க நிலையில் ஆழ் மனதும் அயர்ந்து தூங்கும் அமைதி ... இது அனைவருக்கும் கிடைத்து விடாத வரம்..... யாருமற்ற தனிமையில் தவிக்க வைக்கும் அமைதி ... .இதில் உடல்தனித்திருக்கும்.. உள்ளம் கொதித்திருக்கும்.... உறவுக்கு இடையே நிலவும் அமைதி ... இது புறக்கணிப்பின் உச்சமாக அமையும்....
நண்பர்களுக்கு இடையே நிலவும் அமைதி ... .அது கலகலத்த உள்ளத்தில் ஏற்பட்ட திடிர் தாக்குதலாக இருக்கும்.... காதலர்களுக்கு இடையே ஏற்படும் அமைதி சில சமயம் ஊடலின் தவிப்பாகவும் .. சில சமயம் உள்ளத்தின் பிணைப்பாகவும் இருக்கும்... அரங்கத்தில் நிலவும் அமைதி கவனத்தின் ஈர்ப்பை குறிக்கும்... ஆலயத்தில் நிலவும் அமைதி அற்பணிப்பு மனதின் தெளிவை விளக்கும்... கடும் கோபத்தின் அமைதி பழிக்கு வழித்தேடும்....
தியானத்தில் ஏற்படும் அமைதி மனத்தெளிவை ஊட்டும்.... முதுமை அடைந்து உலக வாழ்வு இதுதான் என்று உணர்ந்த நிலையில் வரும் அமைதி ... இது வெட்ட வெளிபோல் இருக்கும்.... மரணத்தின் பிடியில் மாட்டி உயிரற்ற உடலாய் மாறிய பின் வரும் அமைதி தாயின் கருவறையை மீண்டும் நினைவூட்டும் ...... அமைதியின் சாயல் வாழ்வு முழுதும் நம்மோடே பயணிக்கும்... அதற்கு என்றும் அமைதியில்லை..

Monday, October 8, 2018

"நீயும் நானும் "

படம் இதைக் கொண்டிருக்கலாம்: பறவை மற்றும் வெளிப்புறம்பார்த்துக் கொண்டே இருக்க தூண்டும்!!
பார்வையில் காட்சி கிடையாது!!
பேசிக் கொண்டே இருக்க வேண்டும்!!
வார்த்தையில் பொருள் கிடையாது!!
அருகிலேயே இருக்க வேண்டும்!!
அவசியம் ஏன் என தெரியாது!!
நினைவிலேயே மூழ்க வேண்டும்!!
நியதி எதுவும் கிடையாது!!
கனவிலேயும் வரவேண்டும்!!
கால நேரம் கிடையாது!!
மனதிலேயே வாழ வேண்டும்!!
மாற்றம் என்பது கிடையாது!!
ஆம்.. காதல் உலகு வரையறையற்றதே!!
அதில் "நீயும் நானும் " என்பதே தவமாகும்!!
உண்மை அன்பே பெறும் வரமாகும்!!

புறக்கணிப்பு

புறக்கணிப்பையும் ஏற்றுக்கொள்ளுங்கள்!!!! எதுவும் நன்மைக்கே... புறக்கணிப்போ, விட்டு விலகுதலோ ஏற்படும் போது அதை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவத்தையும் பெற வேண்டும்... தன்னம்பிக்கையுடன் அதை கை நீட்டி வரவேற்க வேண்டும்... நமக்காக இல்லாமல் தேவைக்கு நம்மை நாடும் சிலரின் அன்பை புரிந்துக் கொள்ளும் சந்தர்ப்பமாக அறிந்துக் கொள்வேமே.... அவையே நம்மை நன்முறையில் செதுக்குபவை.. எப்போதும் எல்லா இடத்திலும் நாம் மதிப்புடன் கொண்டாடப்படும் போது... வாழ்கை சூழலின் மறுபக்கமும் , துரோகத்தின் காட்சியும், வெறுப்பின் சூழ்ச்சியும், அகம்பாவத்தின் ஆட்சியும் அறிய முடியாமலே போய் விடும்...
புறக்கணிப்பும், வெறுப்பும் நம் மீது உமிழப்படுவது பலவீனம் அல்ல.. அது நம் மனபலம் அறியும் வாய்ப்பு ... அது நாம் அன்பானவர்கள் என்று எண்ணியிருந்த சிலரின் முகமூடியை தள்ளி விட்டு செல்லும் புயல் காற்று... அதை தைரியத்தோடு எதிர்க் கொண்டு ஏற்றுக் கொள்ளுங்கள்...
உறவோ, நட்போ நம்மை தேவைக்கும், நேரத்திற்கும் பயன்படுத்தி பிறகு புறக்கணித்து உதறி தள்ளுபவர்களை நாமும் புறக்கணிக்க கற்றுக் கொள்வோம்... .புரியாதவர்களிடம் தேடி சென்று வாடி நிற்காமல் ... விலகி நின்று வாழவும்,வாழவிடவும் அறிந்துக் கொள்வோம்... உண்மை அன்பை இழப்பதை விட அவர்களுக்கான மாபெரும் தண்டனை எதுவும் அளித்து விட முடியாது... புறக்கணித்தவர் முன் புகழோடு வாழுங்கள்... யாரிடமும் அதீத அன்பையோ வெறுப்பையோ காட்டாமல் உப்பை போல அளவோடு பழகுங்கள்... நம் அன்பை முழுமையாக அறியாதவரிடம் காட்டும் போது அது கடலில் இட்ட சர்க்கரை போல பலனை அறிய முடியாது போய் விடும் ... ஆகவே புறக்கணிப்பவர்களை புறம் தள்ளி அளவோடு அன்புக்கொண்டு வாழவும் கற்றுக் கொள்வோம்...

அவள் நினைவு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: பறவை 
அவளில்லா நாட்களில் ......
மலர்களும் மலர்ந்திட மறந்தது!!
தென்றலும் தழுவிட மறந்தது!!
வெண்ணிலா குளிர்ந்திட மறந்தது!!
விண்மீன் ஒளிர்ந்திட மறந்தது!!
சிந்தனை பிறந்திட மறந்தது!!
புன்னகை தவழ்ந்திட மறந்தது!!
கண்கள் உறங்கிட மறந்தது!!
இதயம் துடித்திட மறந்தது!!
அனைத்தும் தன்னிலை மறக்க!!
அவன் மட்டும் அவள் நினைவை மறவாதது ஏனோ!!!!!

மனம்

மனதின் நிலைபாடு அறிவோம்!!!
மனம் என்பது உருவற்ற உணர்வு.. ஆனால் நம் வாழ்நாளை செதுக்குவதில் அதற்கு தான் முதலிடம் ... அதனிடம் உண்டாகும் கேள்விக்கான பதில்களே நம் வாழ்வை நகர்த்தி செல்கிறது... மனம் இரண்டு வகை பாடு உடையது... முதல் வகை எதையும் தீர யோசிக்காது கவலை படாது தன் போக்கில் செல்லும் தன்மையுடையது... அதற்கு கட்டுப்பாடு கிடையாது பயம் அறியாது ... பல நேரம் நேர்பட பேசி பலரின் நிம்மதியை கெடுக்கும்... அவர்களே அவர்களுக்கு எஜமான்... அவர்களே சேவகன்.. இத்தகைய மனம் படைத்தவர்கள் இயல்பு வாழ்க்கையுடன் எளிதில் இயந்து வாழ்ந்துவிடுவர்...
மற்றொரு மன நிலைபாடு உள்ளதே அவர்கள் ஆகச் சிறந்தவர்கள்... ஆனால் அவர்களின் வாழ்வு பக்கம் முழுதும் மற்றவர்களால் நிரப்பப்பட்டிருக்கும்... சோகங்களும், துயரங்களும் அதிகம் கடந்திருக்கும்.. பிறர் நலன் கருதி பழியை தன் மீது சுமத்திக் கொண்டு சிறு குழந்தை போல் வாய் மூடி அழும்... இரக்கம் கொண்டு எவருக்கும் துடிக்கும்... சிந்தனை மிகுதியால் பலருக்கும் அறிவு சொல்லும்... உள்ளுக்குள் குழந்தை போல யாருடைய தேற்றுதலையோ தேடும்... புரியாதவர்களால் பழிக்கு ஆளாகும்... புரிந்தவர்களால் எளிதில் ஏமாற்றப்படும்.. நன்மைக்கும் குழையும்', தீமைக்கும் குமுறும் ... மொத்தத்தில் மெழுகை போல் தன்னை உருக்கி ஒளியாக்கும்...
முதல் வகை மனம் படைத்தவர் சுய சிந்தனையும், தற்சார்பும் கொண்டு தன் போக்கில் தனக்கென ஒரு பாதை வகுத்து வாழ்பவர்கள்... இரண்டாம் வகை மனம் பொது சிந்தனையும், பொது நலனும் பிறர் மகிழ்விற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு வாழ்கின்றனர்...
இது போன்ற மன நிலைப்பாடு யாருக்கும் விரும்பி வருவதில்லை... அது இறையோ, இயற்கையோ நமக்கு அளித்த இயல்பு... இதை மாற்ற இயலாது ஆனால் சீர்படுத்தலாம்... இரு வகை மன நிலையையும் சற்று சீர்படுத்திக் கொண்டால்... சிறப்பான மாற்றம் பெறலாம்.... மனதை சீர்படுத்தி மாற்றம் பெறுவோம்

Tuesday, October 2, 2018

வறுமையின் துயரம்

வறுமையின் துயரம் அறிவோம்!!!!!
கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை.. இந்த புகைப்படத்தைக் கண்ட ஒரு நொடி மனம் சற்று தடுமாறி தத்தளித்து கண்ணீர் துளி வந்தும் வராமலும் தங்கி தவிக்கிறது...
   வறுமை உருவாவதில்லை உருவாக்கப்படுகிறது... "தனி மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்" என்ற பாரதி உணவின்றி வாடி இறந்த உண்மை வரலாறு யாவரும் அறிந்ததில்லை... வறுமை எனும் நோயை ஒரு பட்சமான ஆடம்பரமும், தேவையற்ற விளம்பரமுமே கொண்டு சேர்க்கின்றன... நாம் இருக்கும் அனைத்தையும் அல்ல இயன்ற சிறிதை பகிர்ந்து அளித்தாலே வறுமையை முற்றிலும் அழிக்கலாம்... தேவையற்ற செயல்களுக்கு செலவழிக்கும் சிறிதை இயலாதோருக்கு கொடுப்பதால் அவர்களில் இறைவனை காணலாம்..
   உண்ண உணவின்றி , உடுத்த ஆடையின்றி, உடல் மெலிந்து வற்றி வாடி பட்டினி கிடக்கும் அதேவேளையில்... ஆடம்பர ஆடை அணிந்து கேளிக்கை விருந்து சமைத்து உண்ணத் தெரியாதவர் போல் குப்பை கூடையில் வீசி எறிபவர் எத்தனை பேர் ... உணவுக்கு பஞ்சமில்லை இங்கே.. உணர்விற்கே பஞ்சம் உண்மையில்.. பசிக்கு உணவை கேட்பவனை ஏளனமாகவும், பகட்டுக்கு பால் பொழிந்து சாக்கடையில் நிரம்ப விடுதலை பெருமைக்குரிய செயலாகவும் எண்ணும் எண்ணம் சிலர் மனதில் நிலைத்து விட்டது...
  அவர்களும் வாழ பிறந்தவர்களே... ஏளனம் செய்யாமல் ஏற்று மகிழுங்கள்... விழாக்கள் என்ற பெயரில் ஆடம்பர அலங்காரம் செய்து அடுத்த நாள் குப்பையாக வீசி எறியும் பொருட் செல்வத்தை உணவாக்கி இயலாதோர்க்கு கொடுங்கள்.... வாழும் வாழ்வு குறைவானதே... அதில் சேர்க்கும் பணத்தை விட செய்யும் சேவையே நிலைக்கும்... வறுமையை நீக்க உணர்வுடனும் உணவுடனும் களம் இறங்குவோம்... வருங்கால சமுதாயம் வளமாகட்டுமே...